Monday 29 July 2013

Intresting comedy children stories in tamil

source: http://www.koodal.com/jokes/stories.asp?id=178&title=monkey-medicine

குரங்கு வைத்தியம்

 



"குரு நாதா! இனிமேல் நாம் மருத்துவத் தொழில் செய்தால் என்ன?" எனக் கேட்டான், முட்டாள்.
"அதனால் நமக்கு என்ன பயன்?" என்று பரமார்த்த குரு கேட்டார்.
"பணம் கிடைக்கும். அத்துடன் புண்ணியமும் கிடைக்கும்" என்றான், மூடன்.
"அப்படியே செய்வோம்" என்றார் குரு.
"மனிதர்களுக்கு மட்டும்தானா?" என்று கேட்டான் மண்டு.
"மனிதர்க்கும் வைத்தியம் செய்வோம்; மாட்டுக்கும் செய்வோம்; குழந்தைக்கும் செய்வோம்; குரங்குக்கும் செய்வோம்!" என்றான் மட்டி.
பரமார்த்தரும் அவரது ஐந்து சீடர்களும் மருத்துவம் செய்யும் செய்தி ஊர் முழுதும் பரவியது.
காய்ச்சலால் அவதிப்பட்ட ஒருவன் வந்தான். அவன் உடலைத் தொட்டுப் பார்த்த மடையன், "குருவே! இவன் உடம்பு நெருப்பாகச் சுடுகிறது!" என்றான்.
"அப்படியானால் உடனே உடம்பைக் குளிர்ச்சி அடையச் செய்ய வேண்டும்!" என்றார் பரமார்த்தர்.
"அதற்கு என்ன செய்வது?" எனக் கேட்டான் முட்டாள்.
"இந்த ஆளைக் கொண்டுபோய்த் தொட்டியில் உள்ள தண்ணீரில் அழுத்தி வையுங்கள். ஒரு மணி நேரம் அப்படியே கிடக்கட்டும்" என்றார் குரு.
உடனே மட்டியும் மடையனும் அந்த நோயாளியைத் தூக்கிக் கொண்டு போய், தொட்டி நீரில் போட்டனர். முட்டாளும் மூடனும் மாற்றி மாற்றி அவனை நீரில் அழுத்தினார்கள்.
நோயாளியோ "ஐயோ, அம்மா!" என்று அலறியபடி விழுந்தடித்து ஓடினான்.
கொஞ்ச நேரம் கழித்து ஒரு கிழவி வந்தாள். "கண் வலிக்கிறது" என்றாள்.
"இப்போது நேரமில்லை. உண் கண்ணை மட்டும் தோண்டி எடுத்துக் கொடுத்து விட்டுப்போ. சரி செய்து வைக்கிறோம்!" என்றான் முட்டாள்.
கிழவியோ, "ஐயையோ" என்று கத்திக் கொண்டு ஓடினாள்.
சிறிது நேரம் சென்றது. "உடம்பெல்லாம் வெட வெட என்று நடுங்குகிறது என்றபடி ஒருவன் வந்தான்.
"சும்மா இருப்பதால்தான் ஆடுகிறது. உடம்பு முழுவதும் கயிறு போட்டுக் கட்டி விடுங்கள்! அப்போது எல்லாம் சரியாகிவிடும்" என்றார் பரமார்த்தர்.
முட்டாளும் மூடனும், வந்தவனை இழுத்துக் கொண்டு சென்று தூணில் கட்டி வைத்தனர்.
கட்டி வைத்த பிறகும் அவன் உடம்பு நடுங்குவதைக் கண்ட மட்டி, "குருதேவா! இது குளிரால் வந்த நோய். இது தீர வேண்டுமானால், இவன் உடம்பைச் சூடாக்க வேண்டும்!" என்றான்.
அதைக் கேட்ட முட்டாள் தன் கையிலிருந்த கொள்ளிக் கட்டையால் நோயாளியின் உடல் முழுவதும் வரிவரியாகச் சூடு போட்டான்.
வலி தாங்காத நோயாளி சுருண்டு விழுந்தான்.
"பல் வலி தாங்க முடியவில்லை. என்ன செய்வது?" என்று கேட்டபடி வேறொருவர் வந்தார்
"வலிக்கிற பல்லை எடுத்து விட்டால் சரியாகி விடும்" என்றார் பரமார்த்தர்.
சீடர்களோ, ஆளுக்குக் கொஞ்சமாக எல்லா பல்லையும் கத்தியால் தட்டி எடுத்துப் பொட்டலமாகக் கட்டிக் கொடுத்தனர்!
"இனிமேல் உனக்குப் பல்வலியே வராது!" என்றார் பரமார்த்தர்
சற்று நேரம் கழிந்தது. யானைக்கால் வியாதிக்காரன் ஒருவன் வந்தான்.
"உலகிலேயே இதற்கு இரண்டு வகையான வைத்தியம்தான் இருக்கிறது. நன்றாக இருக்கிற காலை வெட்டிவிட்டு, அந்த இடத்தில் யானையின் காலை ஒட்டி விட வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் காலுக்குச் சமமாக இந்தக் காலில் உள்ள சதையைச் செதுக்கி எடுத்து விட வேண்டும்!" என்றார் பரமார்த்தர்
யானைக்கால் வியாதிக்காரனோ, "காலை விட்டால் போதும்" என்று தப்பினான்.
"ஐயா! ஒரே இருமல். தொடர்ந்து இருமிக் கொண்டே இருக்கிறþன்" என்றபடி வேறு ஓர் ஆள் வந்தார். வாயைத் திறப்பதால்தானே இருமல் வருகிறது. வாயை மூடிவிட்டால் என்ன? என்று நினைத்தார், பரமார்த்தர். "இவர் வாயை அடைத்து விடுங்கள்!" என்று கட்டளை இட்டார்.
குருவின் சொல்படி, கிழிந்த துணிகளை எல்லாம் சுருட்டி, இருமல்காரனின் வாயில் வைத்துத் திணித்தான் மட்டி.
"என் ஆடு சரியாகத் தழை தின்னமாட்டேன் என்கிறது" என்றபடி ஒருவன் வந்தான். அந்த ஆட்டைக் கண்ட குரு, "தொண்டையில் ஏதாவது அடைத்துக் கொண்டு இருக்கும்" என்றார்.
"வாயைப் பெரிதாக ஆக்கிவிட்டால் போதும்" என்றான் மடையன்.
கத்தி ஒன்றைத் தூக்கிக் கொண்டு வந்தான், முட்டாள்.
அதைப் பிடுங்கி, ஆட்டை வெட்டப் போனான் மூடன்.
பயந்துபோன ஆட்டுக்காரன், ஆட்டை இழுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.
குருவும் சீடர்களும் வைத்தியம் என்ற பெயரில் கண்டபடி நடந்து கொள்வதைப் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டனர்.
பஞ்சாயத்தார் ஒன்று கூடி, குருவும் சீடர்களும் "இனிமேல் இந்த ஊருக்குள்ளேயே நுழையக் கூடாது" என்ற தண்டனையை வழங்கினர். 











தொப்பை கரைச்சான் லேகியம்!

திடீரென்று பரமார்த்தரின் தொப்பை பெரிதாகிக் கொண்டே போனது. உட்கார்ந்தால் நிற்க முடியவில்லை; நின்றால் உட்கார முடியவில்லை. இதைக் கண்ட சீடர்கள் மிகவும் கவலைப்பட ஆரம்பித்தனர்.
"குருவே! தினம் தினம் உங்கள் தொப்பை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே போகிறதே! எங்களுக்கெல்லாம் பயமாக இருக்கிறது" என்றான் மட்டி.
"வயிறு இவ்வளவு பெரியதாய் இருக்கிறதே! ஒரு வேளை உங்களுக்குக் குழந்தை ஏதாவது பிறக்கப் போகிறதா?" என்று ஆச்சரியப்பட்டான், மூடன்.
"குருவே! இதை இப்படியே விட்டுவிடக் கூடாது. அப்புறம் ஒரு நாளைக்கு உங்கள் தொப்பை டமார் என்று வெடித்து விடும்!" என்று பயம் காட்டினான் மடையன்.
"ஐயையோ!" என்று அலறிய பரமார்த்தர், "இதற்கு என்ன செய்வது?" என்று கேட்டார்.
"சித்த வைத்தியர் யாரிடமாவது காட்டலாம்" என்று யோசனை சொன்னான் மண்டு.
"வைத்தியரிடம் போனால் நிறைய செலவாகும். அதனால் நாங்களே காட்டுக்குச் சென்று மூலிகைகள் பறித்து வருகிறோம். அதிலிருந்து ஏதாவது லேகியம் தயாரித்துச் சாப்பிட்டால், தொப்பை கரைந்து விடும்!" என்று வேறொரு யோசனை சொன்னான், முட்டாள்.
உடனே மூடன், கிடுகிடு என்று பரண்மேல் ஏறி, செல்லரித்துப் போன பழைய ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்துப் படித்துப் பார்த்தான்.
"குருவே! தொப்பை கரைச்சான் லேகியம் என்பது பற்றி இதிலே எழுதியிருக்கு! இதில் குறிப்பிட்டிருக்கும் செடிகளை நாங்கள் கொண்டு வருகிறோம்" என்றபடி கீழே குதித்தான்.
எப்படியாவது தொப்பை கரைந்தால் போதும் என்று நினைத்த பரமார்த்தர், "சீடர்களே! சீக்கிரம் புறப்படுங்கள். நிறைய லேகியம் தயாரித்தால் அதை மற்றவர்களுக்கும் விற்று விடலாம்" என்று அனுப்பி வைத்தார்.
காட்டுக்குச் சென்ற சீடர்கள், "தொப்பை கரைச்சான் மூலிகை" எது என்று தெரியாமல் விழித்தார்கள். அப்போது சற்றுத் தூரத்தில் முனிவர் ஒருவ ஒட்டிய வயிறுடன் தவம் செய்து கொண்டிருந்தார்.
அவரைக் கண்ட மட்டி, இவர் வயிறு இவ்வளவு ஒட்டி இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டு அவரிடம் போனான்.
"முனிவரே! இந்தச் செடிகளில் தொப்பை கரைச்சான் செடி எது என்று தெரியுமா?" என்று பலமாகக் கத்தி அவரது தவத்தைக் கலைத்தான்.
கோபம் கொண்ட முனிவர், "எந்தச் செடி நாறுகிறதோ, அதுதான் நீ கேட்கும் செடி!" என்று வேண்டுமென்றே சொல்லி அனுப்பினார்!
முனிவர் சொன்னதை நம்பிய சீடர்கள், கண்ட கண்ட இலைகளையும் பறிக்க ஆரம்பித்தார்கள். சாப்பிட்டால் பல வியாதிகளை உருவாக்குகிற இலைகளை எல்லாம் பறித்து மூட்டை கட்டினார்கள்.
சீடர்கள் பறித்து வந்த இலைகளை மோந்த பரமார்த்தர், முகத்தைச் சுளித்தார். "நன்றாக நாறுகிறது! எப்படியும் என் தொப்பை கரைந்து விடும்!" என்று மகிழ்ந்தார். அதன்பிறகு, "சீக்கிரம் ஆகட்டும்! எல்லாவற்றையும் கலந்து அரைத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டார்.
முட்டாளும் மூடனும் இலைகளைத் துண்டு துண்டாகக் கிள்ளிப் போட்டனர். மட்டியும் மடையனும் கல்லில் வைத்து அரைக்க ஆரம்பித்தனர். அப்போது இலையில் இருந்து நாற்றம் வரவே, ஒருவர் மூக்கை இன்னொருவர் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் அரைத்தனர்.
எல்லாவற்றையும் வழித்துச் சட்டியில் போட்டனர். அதை அடுப்பில் வைத்துக் காய்ச்சினான்.
அதன்பிறகு சீடர்கள் அனைவரும் லேகியத்தை உருண்டை பிடித்து எடுத்துக் கொண்டு குருவிடம் போனார்கள். "எங்கள் அருமை குருவே! இதோ, தொப்பை கரைச்சான் லேகியம் தயார்! உடனே இதைச் சாப்பிடுங்கள்" என்று பரமார்த்தரை வேண்டினார்கள்.
"பார்ப்பதற்குக் கொழ கொழ என்றும் கன்னங்கரேல் என்றும் இருந்த லேகியத்தைக் கண்டதுமே பரமார்த்தரின் முகம் பல கோணலாக மாறியது.
முட்டளிடமிருந்து ஓர் உருண்டையை வாங்கி மூக்கருகே கொண்ட போனார். அதிலிருந்து வந்த நாற்றம் அவர் வயிற்றைக் கலக்கியது.
"குருவே! யோசிக்காதீர்கள். நீங்கள் உயிர் வாழ வேண்டுமானால் உங்கள் தொப்பை கரைய வேண்டும். உங்கள் தொப்பை கரைய வேண்டுமானால் இதைச் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை!" என்று கூறினான், மட்டி.
பரமார்த்தரும், வேறு வழியின்றி இரண்டு உருண்டைகள் விழுங்கினார்.
"குருவே! இதையும் சாப்பிட்டு விடுங்கள். அப்போதுதான் தொப்பை சீக்கிரம் கரையும்!" என்ற படி இன்னும் சில உருண்டைகளை அவர் வாயில் கட்டாயமாகத் திணித்தனர், முட்டாளும் மூடனும்.
பரமார்த்தர் தம் தொப்பையைக் கரைப்பதற்காக ஏதோ ஒரு லேகியம் சாப்பிடுவதாகக் கேள்விப்பட்ட ஊர் மக்களில் சிலர், தாங்களும் அந்த லேகியத்தைச் சாப்பிட ஆசைப்பட்டனர்.
அந்த நாட்டு அரசனுக்கும் பெரிய தொப்பை இருந்ததால், அவனும் பரமார்த்தர் தயாரித்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு விட்டான்.
நேரம் செல்லச் செல்ல, எல்லோருக்கும் வயிற்றைக் கலக்கியது. "ஐயோ! என் தொப்பை வலிக்கிறதே!" என்று பரமார்த்தரும், மற்ற தொப்பைக்காரர்களும் அலற ஆரம்பித்தனர்.
தொப்பை கரைச்சான் லேகியம் என்று நினைத்து கண்டதையும் சாப்பிட்டதால், அனைவருக்கம் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு விட்டது. எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு ஏரிக் கரைக்கு ஓடினார்கள்.
மன்னரின் நிலைமையும் மோசமாகி விடவே, பரமார்த்தர் மீது கோபம் கொண்டார்.
இத்தனைக்கும் காரணமான அந்தக் குருவைப் பத்து நாட்களுக்குச் சிறையில் அடைத்துப் பட்டினி போடுங்கள்!" என்று ஆணையிட்டான்.
சிறையிலிருந்து தள்ளாடியபடி அந்தக் குருவைக் கண்ட சீடர்களுக்கு வியப்பாகப் போயிற்று. முன்பு வீங்கியிருந்த அவரது தொப்பை இப்போது கரைந்து அளவாக இருந்தது.
"குருவே! நாங்கள் தயாரித்த லேகியம் தான் உங்கள் தொப்பையைக் கரைத்திருக்கிறது" என்று சீடர்கள் பெருமையோடு சொன்னார்கள்.
"லேகியமாவது, மண்ணாங்கட்டியாவது! சோறு தண்ணீர் இல்லாமல் பத்து நாட்கள் சிறையில் பட்டினி கிடந்தேன். அதுதான் இப்படி ஆகிவிட்டேன்!" என்றபடி பசிக் களைப்பால் சுருண்டு விழுந்தார், பரமார்த்தர்.


No comments:

Post a Comment