Sunday, 18 August 2013

Vive La France Tamil review

Vive la France  என்ற பிரெஞ்சு படத்தை நேற்றிரவு பார்த்தேன்,  மிகச்சிறந்த நகைச்சுவைபடமிது,
Taboulistan என்றொரு கற்பனையான நாடு, உலக நாடுகள் யாரும் தன்னைக் கண்டுகொள்ளவேயில்லை, தங்களின் பாராம்பரிய Tabbouleh  உணவு  பற்றி ஒருவரும் அறிந்திரு க்கவில்லை, அதை லெபனான் உணவு என தவறாக கூறுகிறார்கள்  என அந்த நாட்டு சர்வாதிகாரிக்குப் பெரிய ஆதங்கம், அதனால்  உலகின் கவனத்தை ஈர்க்க commercial terrorism என்ற முறையைக் கையாள முடிவு செய்கிறார்
அதாவது ஒரு தற்கொலைப் படையை அனுப்பி தீவிரவாதச் செயல்களை செய்ய வைத்து கவனத்தை ஈர்ப்பது,
இதற்காக ஒரு தீவிரவாதக் குழுவை ஆரம்பித்து விமானத்தில் போய் பாரீஸ் நகரில் உள்ள ஈபில் டவரை மோதி சிதைக்கத் திட்டம் போடுகிறார்,
இந்த வேலையை செய்ய Feruz.  Muzafar என இரண்டு ஆடு மேய்ப்பவர்கள் தேர்வு செய்யப்பட்டு தீவிரவாதிகளாகப்  பயற்சி கொடுக்கபட்டு உருவாக்கபடுகிறார்கள், இருவரும் நமது வடிவேலு ரக ஆட்கள்,
போலி பாஸ்போர்டில் பயணம் செய்யும் இவர்கள் விமானத்தைக் கடத்துவதற்கு முன்பாக. எதிர்பாராத சூழ்நிலையால் பாரீஸ் போய் இறங்குவதற்கு பதிலாக Corsica வில் போய் இறங்குகிறார்கள், ஈபில் டவர் எங்கே இருக்கிறது என  இடம் தெரியாமல் அலைகிறார்கள்
தங்கள் நாட்டில் பெண்கள் ஆண்களைக் கை நீட்டி பேசமாட்டார்கள், ஆணின் கட்டளைகளுக்கு அடிபணிவார்கள், ஆனால் பிரான்சில் அப்படியில்லை என்று கோபம் கொண்ட முசாபர் ஒரு பெண்ணை அடித்துவிடவே உணவகத்தில் இருந்து துரத்தப்படுகிறார்கள்
ஒரு இரவை கழிக்க பெரிய மாளிகை போன்ற வீடு ஒன்றுக்குள் புகுந்து கொள்ள அங்கே வேறு ஒரு தீவிரவாத கும்பலால் கடத்தப்படுகிறார்கள், கட்டிப்போடப்பட்டு விசாரணை நடக்கிறது,
நீங்கள் யார் என கடத்தியவர்கள் கேட்க, தீவிரவாதிகள் என்கிறார்கள், அப்படியானால நாங்கள் யார் என அவர்கள் கேட்க நீங்களும் தீவிரவாதிகள், என சொல்லி,  ஒரு தீவிரவாதி இன்னொரு தீவிரவாதியைக் கடத்தலாமா என அப்பாவிதனமாகக் கேட்டு  அவர்கள் மனதை மாற்றி அவர்களின் உதவியை பெறுகிறார்கள்
அவர்களின் பாரீஸ் நோக்கிய பயணம் மீண்டும் தொடர்கிறது.
இன்னெரு இடத்தில் மூக்கில் அடிபட்டு மருத்துவமனையில் சேர இங்கே தவறான சிகிட்சை காரணமாக ஒருவனின் கிட்னி எடுக்கபடுகிறது,  தனது கிட்னி தனக்கு வேண்டும் என்று சண்டையிட, அதற்கு உதவி செய்ய ஒரு பெண் பத்திரிக்கையாளர் வந்து சேர, அங்கிருந்து காமெடி முடிவில்லாமல் தொடர்கிறது,
சிறைச்சாலையில் மாட்டிக் கொள்வது, பொம்மை போல உடை அணிந்து தப்பி ஒடுவது, விருந்தில் கலாட்டா செய்வது,  குடித்துவிட்டு ஆடுவது என அடுத்தடுத்து இவர்கள் செய்யும் நகைச்சுவை நம்மை வெடிச்சிரிப்பு சிரிக்க வைக்கிறது
இரண்டு வேடிக்கையான தீவிரவாதிகளை வைத்துக் கொண்டு  ஈபில் டவரை தகர்க்கப்போடும் திட்டஙகளும் அதன் அதிரடி விளைவுகளும் நம்மை வாய்விட்டு சிரிக்க வைக்கின்றன , சில ஆண்டுகளுக்கு முன்பாக Borat என்றொரு படம் வந்தது, அது இது போன்ற சிறந்த நகைச்சுவைப்படம்,  போராட் வரிசையில் இன்னொரு நகைச்சுவைப் படமிது,
ஒய்வாக வீட்டில் அனைவருடன் பார்த்து சிரிக்க நல்லதொரு திரைப்படமிது

Source: http://www.sramakrishnan.com/

No comments:

Post a Comment