Monday 5 August 2013

Ford Escort (AT) 1.5 Petrol vs Volkswagen Polo

ஃபோர்டு எக்கோஸ்போர்ட்டையும், ஃபோக்ஸ்வாகன் போலோவையும் ஒப்பிடுவது - ஆப்பிளோடு மாம்பழத்தை ஒப்பிடுவதுபோலத்தான். என்றாலும், உண்மையில் இரண்டு கார்களும் போட்டி போடும் மார்க்கெட் ஒன்றுதான். எக்கோஸ்போர்ட் எஸ்யூவி தோற்றத்திலும், போலோ ஜிடி ஹேட்ச்பேக் காராகவும் இருப்பது மட்டுமே வித்தியாசம். பவர், பெர்ஃபாமென்ஸ், விலை ஆகியவற்றில், இரண்டு கார்களுமே சம பலத்தோடு நின்று போட்டி போடுகின்றன. 
இரண்டு கார்களும் 100 bhp சக்தியைத் தாண்டுகின்றன. அதேபோல், இரண்டு பெட்ரோல் கார்களிலுமே டுயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உண்டு. இரண்டுமே 2 வீல் டிரைவ் சிஸ்டம்கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டைல்
போலோ டிசைனைப் பொறுத்தவரை, ஃபோக்ஸ்வாகன் கார்களுக்கே உரிய பாரம்பரிய டிசைன்தான். எந்த ஜொலிஜொலிப்பும், பளபளப்புக்கும் ஃபோக்ஸ்வாகன் கார்களில் இடம் இருக்காது. ஹேட்ச்பேக் கார் என்றால், எப்படி இருக்க வேண்டும் என்று டிசைன் விதிகளில் எழுதப்பட்டு இருக்கிறதோ, அதன்படி அச்சு பிசகாமல் போலோவை வடிவமைத்திருக்கிறார்கள். அதனால், 'அட’ என்று திரும்பிப் பார்க்க வைக்கும் எந்த அம்சமும் போலோவின் டிசைனில் கிடையாது. அதே சமயம், வெறுக்கத்தக்க டிசைனும் கிடையாது. மாடர்னான, அதேசமயம் ஹேட்ச்பேக் கார்களுக்கே உரிய டிசைனுடன் இருக்கிறது போலோ.
இங்கே நாம் டெஸ்ட் செய்வது ஜி.டி. அதாவது, கிராண்ட் டூரிஸ்மோ எனப்படும் போலோவின் ஸ்போர்ட்ஸ் வேரியன்ட். ஸ்போர்ட்ஸ் கார் என்று சொல்ல ஒன்றிரண்டு அசத்தல் விஷயங்கள்கூட இதில்  சேர்க்கப்படவில்லை. முன் பக்க க்ரில்லில் 'ஜிடி’ என்ற எழுத்தும், காரின் பின் பக்கத்தில் 'போலோ’ என்ற பெயரே இல்லாமல் 'ஜிடி’ என்று மட்டும் இருப்பதே, போலோவுக்கும் - போலோ ஜிடிக்கும் உள்ள வித்தியாசம். அலாய் வீலை ஸ்போர்ட்டியாக வடிவமைக்கூட ஃபோக்ஸ்வாகன் யோசிக்கவில்லை.
ஃபோர்டு எக்கோ ஸ்போர்ட்டைப் பொறுத்தவரை, இது ஓவர் ஸ்டைலாக இருக்கிறது. எக்கோஸ்போட்டின் முன் பக்கம் 30 லட்ச ரூபாய் சொகுசு எஸ்யூவி கார்களுக்குப் போட்டியான டிசைன் எனச் சொல்லலாம். காரின் பின் பக்கம் வைக்கப்பட்டிருக்கும் ஸ்பேர் வீல், காருக்குக் கம்பீரமான தோற்றத்தைத் தருகிறது. ஆனால், முன்னும் பின்னும் பிரம்மாண்டமான எஸ்யூவி போலத் தோன்றும் காரை, பக்கவாட்டில் இருந்து பார்த்தால் சின்ன கார் என்ற உண்மை தெரிந்துவிடுகிறது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 மிமீ என்பதால், ஸ்பீடு பிரேக்கர்களையும், மேடு பள்ளங்களையும் கண்டு பயப்பட தேவையில்லை.
உள்ளே
போலோவை பொறுத்தவரை, காரின் வெளித் தோற்றத்துக்கு சொன்ன வர்ணனை உள்ளலங்காரத்துக்கும் பொருந்தும். ஆம். எந்த வித பந்தாவுக்கும் இடம் கொடுக்காமல் இருக்கிறது போலோவின் உள்ளலங்காரம்.  சென்டர் கன்ஸோலின் வடிவமைப்பும், பட்டன்களும் பழைய கார் ஸ்டைலிலேயே இருக்கின்றன. எந்த இடத்திலும் ட்ரெண்டியாகவோ, ஸ்போர்ட்டியாகவோ இல்லை. ஆனால், பிளாஸ்டிக் பாகங்களின் தரத்திலும், ஃபிட் அண்டு ஃபினிஷிலும் ஜெர்மன் தரத்துடன் இருக்கின்றன. தரத்தில் எக்கோஸ்போர்ட், போலோ ஜிடியுடன் போட்டியே போட முடியாது. கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி, 2 டின் மியூசிக் சிஸ்டம், ஆக்ஸ் போர்ட் மற்றும் ப்ளூடூத், பென் டிரைவ் மற்றும் எஸ்டி கார்டு இணைக்கும் வசதிகளையும் கொண்டிருக்கிறது போலோ ஜிடி.
ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்கொண்ட ஃபோர்டு எக்கோஸ்போர்ட்டில் ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் உள்ளன. ஃபோர்டின் வாய்ஸ் கன்ட்ரோல், அதாவது மியூசிக் சிஸ்டம், போன் ஆகியவற்றைக் குரல் மூலம் வழிநடத்தும் வசதி சிறப்பாக வேலை செய்கிறது. போலோவில் நான்கு ஸ்பீக்கர்களே இருக்க, எக்கோ ஸ்போர்ட்டில் இருக்கும் 6 ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம் செம பஞ்ச்சியாக இருக்கிறது. ஆனால், பிளாஸ்டிக் பாகங்களின் தரம் மிகவும் சுமார்.
ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்கொண்ட கார்கள் என்பதால், டிரைவர்களை வைத்து யாரும் காரை ஓட்ட மாட்டார்கள் என்பதுதான் கணிப்பு. அதனால், இந்த வகை கார்களில் முன் பக்க இருக்கைகளில் அதிக இட வசதி இருக்க வேண்டும் என்கிற எண்ணுத்துடனேயே காரை வடிவமைப்பார்கள். அதன்படி பார்த்தால், இரண்டு கார்களுமே முன் பக்க இட வசதியில் தாராளம். இரண்டில், எக்கோஸ்போர்ட்தான் இட வசதி மற்றும் இருக்கையின் சொகுசுத் தரத்தில் சிறந்த கார். ஆனால், எக்கோஸ்போர்ட் காரின் முன் பக்க 'ஏ’ பில்லர் அகலமாக இருப்பதால், வளைவுகளில் காரைத் திருப்பும்போது சாலையை மறைக்கிறது. பக்கவாட்டில் பைக்குகள் வந்தால், சுத்தமாகத் தெரியாது. அதனால், மிகவும் கவனமாக ஓட்ட வேண்டியிருக்கிறது. மேலும், பின் பக்கக் கண்ணாடியின் நீளமும் குறைவு. எனவே, ரிவர்ஸ் எடுக்கும்போதும் அதிகக் கவனம் தேவை.
பின் பக்க இட வசதியிலும் எக்கோஸ்போர்ட்தான் பெஸ்ட். ஆனால், இரண்டு கார்களிலுமே பின் பக்கம் இரண்டு பேர்தான் வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடியும். ஆனால், எக்கோஸ்போர்ட்டுடன் ஒப்பிடும்போது போலோவின் பின் பக்க இருக்கைகளில் கால்களை நீட்டி மடக்கி உட்கார போதுமான இடம் இல்லை. டிக்கியிலும் போலோ சின்ன காராகவே இருக்கிறது. ஃபோர்டு எக்கோஸ்போர்ட்டின் டிக்கி 346 லிட்டர் கொள்ளளவுடன் இருக்க, போலோவின் டிக்கி 284 லிட்டர் கொள்ளளவுடன் மிகவும் சிறிதாக இருக்கிறது.
பாதுகாப்பு வசதிகளைப் பொறுத்தவரை, இரண்டு கார்களிலுமே ஏபிஎஸ் பிரேக்ஸ், இரண்டு காற்றுப் பைகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்ஸார், மலைப் பாதையில் கார் கட்டுப்பாடு இழந்து பின்னால் செல்லாமல் தடுக்கும் ஹில் அசிஸ்ட் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி சிஸ்டமும் உள்ளது. ஃபோர்டில் கூடுதலாக ட்ராக்ஷன் கன்ட்ரோலும் பக்கவாட்டுக் கதவுகளில் காற்றுப் பைகளும், உள்ளன. இந்திய கார்களில் எதிலும் இல்லாத எமெர்ஜென்சி அசிஸ்ட் சிஸ்டமும் எக்கோஸ்போர்ட்டில் உள்ளது. போனை காருடன் இணத்து வைத்திருந்தால், விபத்து ஏற்படும்போது ஆட்டோமேட்டிக்காக போன் 108 ஆம்புலன்ஸுக்கு டயல் ஆகும் சிஸ்டம் இது.
பெர்ஃபாமென்ஸ்
இரண்டு கார்களின் பவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும், பெர்ஃபாமென்ஸில் இரண்டு கார்களும் தனித்துவத்துடன் இருக்கின்றன. ஃபியஸ்ட்டாவில் இருந்து எடுக்கப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், அதிகபட்சம் 110 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. எக்கோஸ்போர்ட்டின் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் நகருக்குள் ஓட்டுவதற்குச் சிறப்பாக இருக்கிறது. ஆனால், நெடுஞ்சாலையில் திணறுகிறது. டிரைவ் மோடில் கியர் லீவரை வைத்துவிட்டு வேகம் பிடிக்க ஆக்ஸிலரேட்டரை வேகமாக அழுத்தினால், உடனுக்குடன் கியர்கள் மாறி ஆறாவது கியருக்கு ஆட்டோமேட்டிக்காகச் சென்றுவிடுகிறது. இது மைலேஜ் அதிகம் கிடைக்க உதவும் என்றாலும், காரின் பெர்ஃபாமென்ஸ் அடிவாங்கிவிடுகிறது. மேலும், அதிக வேகத்தில் செல்லும்போது இன்ஜின் சத்தமும் அதிகமாகக் கேட்கிறது. அதேபோல், நீங்கள் ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுத்தாலும், சட்டென கியர்கள் குறையவில்லை.
இதே 'எஸ்’ மோடில் ஓட்டும்போது கொஞ்சம் பரவாயில்லை ரகம். இதில் கியர்கள் உடனுக்குடன் மாறவில்லை. இந்த மோடில் வைத்துவிட்டு ப்ளஸ், மைனஸ் பட்டன்கள் மூலம் கியர்களை மாற்றி மேனுவலாகவும் ஓட்ட முடியும். ஆனால், இதைப் பயன்படுத்தி ஓட்ட உங்களுக்கு மிகவும் பொறுமை வேண்டும்.
போலோ ஜிடியில் 1.2 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பவர் டெலிவரி மிகவும் சீராக இருப்பதுதான் போலோ ஜிடியின் பலம். எக்கோஸ்போர்ட்டின் இன்ஜினைவிட நன்றாக ட்யூன் செய்யப்பட்டிருக்கிறது போலோ ஜிடி. எக்கோஸ்போர்ட்டைவிட வேகமாக... அதாவது 2.6 விநாடிகள் முன்னதாகவே 0-100 கி.மீ வேகத்தைத் தொட்டுவிடுகிறது போலோ.
எக்கோஸ்போர்ட்டைவிட போலோ 128 கிலோ எடை குறைவு என்பதே இந்த வேக விறுவிறுப்புக் காரணம்.
ஃபோக்ஸ்வாகன் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், பல காலங்களாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த கியர்பாக்ஸ்தான் ஸ்கோடா, ஆடி கார்கள் வரை எல்லாவற்றிலும் இடம் பிடித்திருக்கிறது. இந்த 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. ஆனால், அடுத்த அடுத்த கியர்களுக்கு மாறும்போது போலோவில் ஒரு ஜெர்க் தெரிகிறது. குறிப்பாக, டிராஃபிக் நெருக்கடிகளில் ஓட்டும்போது இதை நன்றாக உணர முடிகிறது.
ஓட்டுதல் தரம்
அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட கார்களில், பாடி ரோல் அதிகம் இருக்கும் என்பதற்கு, ஈக்கோஸ்போர்ட்டும் விதிவிலக்கல்ல. வளைவுகளில் ஓட்டும்போது அதிக பாடி ரோலை உணர முடிகிறது. கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவான போலோ ஜிடியில் பாடி ரோல் இல்லை என்பதோடு, ஸ்டெபிளிட்டியும் சிறப்பாக இருக்கிறது. ஆனால், போலோவின் ஸ்டீயரிங் மிகவும் லைட்டாக இருக்கிறது. இதனால், வேகமாகச் செல்லும்போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எக்கோஸ்போர்ட்டின் ஸ்டீயரிங் வளைத்து, திருப்பி ஓட்டுவதற்கு ஏற்ற உற்சாகத்தைத் தூண்டும் ஸ்டீயரிங்காக இருக்கிறது.
எக்கோஸ்போர்ட்டின் நீளமான சஸ்பென்ஷன், மேடு பள்ளங்களைச் சமாளிப்பதில் சிறந்ததாக இருக்கிறது. இதனால், காருக்குள் அலுங்கல் குலுங்கல்கள் அதிகமாக இல்லை. ஆனால், போலோவில் ஆட்டம் காருக்குள் அதிகமாகத் தெரிகிறது.
எதை வாங்கலாம்?
சில ஆண்டுகளுக்கு முன்பு ஹேட்ச்பேக் கார்களுக்கு எப்படி ஒரு கிரேஸ் இருந்ததோ, அது இப்போது எஸ்யூவி கார்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. அதுவும் சின்ன எஸ்யூவி கார்கள்தான் இப்போதைய ட்ரெண்ட். அதைச் சரியாகப் புரிந்துகொண்டு, ஸ்டைலான காரைக் கொண்டுவந்திருக்கிறது ஃபோர்டு. சின்ன எஸ்யூவி கார்தான் வேண்டும் என்பவர்கள், எதையும் யோசிக்க வேண்டியதில்லை. எக்கோஸ்போர்ட்டை வாங்கலாம்.
ஆனால், போலோ டிரைவர்களின் காராக இருக்கிறது. சின்ன கார்தான் என்றாலும் பெர்ஃபாமென்ஸில் சிறந்த காராக இருக்கிறது. விலையைப் பொறுத்தவரை ஃபோர்டு எக்கோஸ்போர்ட்டின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலின் சென்னை ஆன் ரோடு விலை  ரூ.10,66,433. போலோ ஜிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலின் விலை ரூ. 9,34,720. எக்கோஸ்போர்ட் காரைவிட 1 லட்ச ரூபாய் குறைவு என்பதோடு, ஓட்டுநர்களின் காராகவும் இருக்கிறது போலோ ஜிடி!

No comments:

Post a Comment